திருவண்ணாமலை: ''மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்துவது தான், பா.ஜ.,வின் குறிக்கோள்,'' என, பா.ஜ., மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் கூறினார். சேலத்தில் நடக்கவுள்ள, இளம்தாமரை மாநாடு தொடர்பாக, திருவண்ணாமலை, செட்டிப்பட்டில் நடந்த, மாவட்ட இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், நிருபர் களிடம் கூறியதாவது: தமிழகத்தில், தமிழை வளர்க்கிறோம் என கூறிக்கொண்டு, தி.மு.க., - எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பலர், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் நடத்தி வருகின்றனர். அதில் தமிழ் கற்பிக்கப்படவில்லை, இதன் மூலம், தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது என்பது, வெட்ட வெளிச்சமாகிறது. மதுவிலக்கு என்பது, பா.ஜ.,வின் குறிக்கோள். வரும் காலங்களில் பா.ஜ., கூட்டணி ஆட்சி மலர்ந்தால், பூரண மதுவிலக்கிற்கு வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.