ஓசூர்: ''ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநில போலீசாரின் கூட்டு முயற்சியால், கொள்ளை கும்பல் பிடிபட்டது,'' என, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., பண்டிகங்காதர் கூறினார்.
இது குறித்து, சைபராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: ஓசூரில் நடந்த கொள்ளை தொடர்பாக, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா என, மூன்று மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்து, கூட்டு முயற்சியாக, சைபராபாத் போலீசார் உதவியுடன், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை விரைந்து பிடித்ததற்காக, பாராட்டு தெரிவித்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்ந்து, சைபராபாத், மாநகர போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் நிருபர்களிடம் கூறுகையில், ''கொள்ளை கும்பல் குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் தகவல் தெரிவித்தனர். நகையுடன் ஜி.பி.எஸ்., கருவி இருந்ததால், கொள்ளையர்கள் வரும் பகுதி கண்டறியப்பட்டு, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இக்கும்பல் பெங்களூருவில் கொள்ளையடிக்கவும் திட்டம் தீட்டி உள்ளனர். அங்கு முடியாததால், ஓசூரில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். தமிழக போலீசார், உரிய நேரத்தில் தகவல் கொடுத்தால், குற்றவாளிகள் அனைவரும் பிடிக்கப்பட்டு, நகைகளும் மீட்கப்பட்டுள்ளன,'' என்றார்.