''பெட்ரோல், டீசல் விலை உயர்வால், லாரி தொழில் முடங்கும் அபாயம் உள்ளது. மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும். இப்பிரச்னைக்கு தீர்வு காண, ஏ.ஐ.எம்.டி.சி.,யிடம் வலியுறுத்தி உள்ளோம்,'' என, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு தலைவர் குமாரசாமி கூறினார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச், 24 முதல், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில், பொதுத்துறை நிறுவனங்கள், எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்நிலையில், கடந்த, ஜூன் முதல், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. விரைவில் லிட்டர், 100 ரூபாயை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 20ல், பெட்ரோல், ஒரு லிட்டர், 88.54 ரூபாய்க்கும், டீசல், 81.37 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம், பெட்ரோலுக்கு, ஒரு லிட்டர், 22 காசும், டீசலுக்கு, 24 காசும் என உயர்த்தி, முறையே, 88.76ம், 81.61ம் என, உயர்த்தியது. அதேபோல், நேற்றும், பெட்ரோலுக்கு, 22 காசும், டீசலுக்கு, 24 காசும் அதிகரித்து, பெட்ரோல் ஒரு லிட்டர், 88.98 ரூபாய், டீசல், 81.55 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில், பெட்ரோலுக்கு, 44 காசும், டீசலுக்கு, 48 காசும் உயர்ந்துள்ளது. சேலத்தில், கடந்த ஜன., 1ல், 87.36 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை, நேற்று, 89.19 ரூபாயாக அதிகரித்தது. இரு நாளாக, தலா, 22 காசுகள் வீதம் அதிகரித்தது. அதேபோல், ஜன., 1ல், 80.06 ரூபாயாக இருந்த டீசல் விலை, நேற்று, 81.99 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம், 130க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகள் இயங்குகின்றன. தமிழக எல்லையிலுள்ள ஓசூரில், நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல், 89.95 ரூபாய்க்கும், டீசல், 82.75 ரூபாய்க்கும் விற்பனையாகின. நேற்று, பெட்ரோலுக்கு, 22 முதல், 24 காசுகள் உயர்ந்து, புதிய உச்சமாக, 90.19 ரூபாய் என, விற்பனையானது. டீசல், 24 முதல், 25 காசுகள் உயர்ந்து, 83 ரூபாய் என விற்றது. பெட்ரோல் பவர், ஒரு லிட்டர், 93.13 முதல், 93.29 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கிருஷ்ணகிரியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல், 89.87 ரூபாய், டீசல், 82.69 ரூபாய் என இருந்தது. ஈரோடு மாவட்டத்தில், நேற்று பெட்ரோல் லிட்டர், 88.86 ரூபாய், டீசல் லிட்டர், 81.72 ரூபாய் விலையில் விற்பனையாகிறது. ஈரோடு, பெருந்துறை சாலையில் உள்ள ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்கில், நேற்று ஒருலிட்டர் பெட்ரோல், 88.74 ரூபாய்க்கு விற்பனையானது. தர்மபுரியில், நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல், புதிய உச்சமாக, 89.47 ரூபாய்க்கு விற்பனையானது. தர்மபுரி, தொப்பூர் பெட்ரோல் பங்கில், 89.32 ரூபாய், காரிமங்கலத்தில், 89.60 ரூபாய் என விற்பனையானது.
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு தலைவர் குமாரசாமி கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலையை கன்னா பின்னான்னு உயர்த்தி வருகின்றனர். இப்படியே உயர்த்திக் கொண்டே இருந்தால், லாரி தொழில் முடங்கும் அபாயம் உள்ளது. டீசல் விலை ஏறினால், அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். அதனால், லாரி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தவிர, மறைமுகமாக அனைவரும் பாதிக்கப்படுவர். இப்பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என, ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸிடம் (ஏ.ஐ.எம்.டி.சி.,)வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் குழு -