அன்னூர்:தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடம், தேர்தல் கமிஷன் சிறப்பு சர்வே நடத்தி வருகிறது.சட்டசபைத் தேர்தல், வருகிற, ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணியில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. தேர்தல் குறித்து வாக்காளர்களின் அறிவு, அணுகுமுறை மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்து, சர்வே நடத்த தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியது.இதன்படி திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, திருப்பூர் வடக்கு, தாராபுரம், உடுமலைப்பேட்டை, பல்லடம் ஆகிய ஐந்து தொகுதிகளில், தலா ஐந்து ஓட்டுச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டன.அவிநாசி ஒன்றியத்தில், 4 ஓட்டுச்சாவடிகளிலும், அன்னூர் ஒன்றியத்தில், ஒரு ஓட்டுச்சாவடியிலும் ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்பட்ட, 43ம் எண் ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட 10 வாக்காளர்களிடம், பொருளியல் மற்றும் புள்ளியல் துறை அலுவலர்கள், வினா பட்டியலை கொடுத்து பதில் பெற்றனர்.தேசிய வாக்காளர் தினம் குறித்தும், எந்த அம்சத்தை வைத்து வேட்பாளருக்கு வாக்களிக்கிறார்கள், தேர்தல் குறித்து டிவி, செய்தித்தாள் உள்ளிட்ட எந்த ஊடகம் வாயிலாக, தெரிந்து கொள்கிறார்கள் என்பன உள்ளிட்ட வினாக்களை கேட்டு, பதில்களை பதிவு செய்து கொண்டனர். சர்வேயில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.