பழவேற்காடு - நீண்ட இழுபறிக்கு பின், பழவேற்காடு- - பசியாவரம் இடையே, கழிமுகப் பகுதியில், 18.20 கோடி ரூபாயில், பாலம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.
பழவேற்காடு அடுத்த, பசியாவரம், இடமணி, இடமணி ஆதிதிராவிடர் காலனி, ரக்மத் நகர், சாட்டன்குப்பம் ஆகிய ஐந்து மீனவ கிராமங்களில், 1,700 குடும்பங்களும், அதில், 5,000க்கும் மேற்பட்ட மீனவ மக்களும் வசிக்கின்றனர்.பழவேற்காடு- - பசியாவரம் இடையே பாலம் அமைப்பதற்காக, சுனாமி மறுவாழ்க்கை வசதிகள் திட்டத்தில், 2007- - 08ம், நிதியாண்டில், 18.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.பழவேற்காடு, மாநில நெடுஞ்சாலையில் இருந்து, பசியாவரம் கிராமம் வரை, 8.5 மீட்டர் அகலம், 434 மீட்டர் நீளத்தில் அமைக்க திட்டமிடப்பட்டது.பாலம் அமைப்பது தொடர்பாக வனம், சுற்றுச்சூழல் அனுமதி கிடைப்பதில், இழுபறி நீடித்து வந்தது.இத்துறைகள் மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும், பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு குறித்து ஆய்வு செய்யும் அமைப்பு ஆகியவை ஆய்வு செய்து பாலம் அமைக்க அனுமதியளித்தன. மேற்கண்ட ஆய்வு பணிகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது.பல்வேறு துறைகளின் அனுமதி மற்றும் இழுபறிக்குப் பின், தற்போது, பழவேற்காடு - -பசியாவரம் இடையே, பாலம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக, மண் பரிசோதனை மாதிரி பில்லர் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.தளவாட பொருட்களை கொண்டு செல்வதற்கான தற்காலிக பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.இனி, தடையின்றி பணிகள் நடைபெறும் எனவும், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள், பணிகளை முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாகவும், பொன்னேரி கோட்ட உதவி செயற்பொறியாளர் ஆண்டி தெரிவித்தார்.