பேரூர்:''நம் செயல்களால் நாட்டுக்கு நன்மை மட்டுமே நடக்க வேண்டும்,” என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.குடியரசு தின வாழ்த்து செய்தியில், சத்குரு கூறியுள்ளதாவது:நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். நம் தேசம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே கலாசாரத்தின் தேசமாக வளர்ந்து வந்துள்ளது. இது, பிழைப்பை நோக்கமாக கொண்ட கலாசாரம் கிடையாது. அதேபோல், பிறரை அடிமைப்படுத்தி ஆக்கிரமிக்கும் கலாசாரமும் கிடையாது.நம் கலாசாரம் ஆன்மிகத்தில் ஊறி வளர்ந்தது. நாம் எப்போதும் உண்மை தேடுதலில் இருக்கிறோம். பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, நாம் இளமையான நாடாக இருக்கிறோம். நம் மக்கள் தொகையில், 50 சதவீதம் பேர், 30 வயதுக்கு கீழ் இருக்கின்றனர்.அடுத்த, ஐந்து முதல், பத்து ஆண்டுகளில், நம்மால் மகத்தான மாற்றத்தை கொண்டு வர முடியும். நாம் எந்த செயல் செய்தாலும், அது நாட்டுக்கு நன்மை விளையக் கூடியதாக இருக்க வேண்டும் என, இந்த, குடியரசு தினத்தில், நாம் அனைவரும் ஒரு உறுதி எடுத்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.