சென்னை, சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தேசிய கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
சென்னை மெரினா கடற்கரையில், காந்தியடிகள் சிலை அருகே, நேற்று குடியரசு தின விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலை, 7:52 மணிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., வந்தார். அவரது காருக்கு முன்னும், பின்னும், 15 மோட்டார் சைக்கிள்களில், போக்குவரத்து போலீசார் அணிவகுத்து சென்றனர்.
பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு, விழா மேடைக்கு வந்த முதல்வரை, தமிழக அரசின் தலைமை செயலர் சண்முகம் வரவேற்றார்.
காலை, 7:54க்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வந்தார். அவரது கார் முன்பாகவும், பின்னாலும், விமானப்படை வீரர்கள், மோட்டார் சைக்கிளில் அணிவகுத்து வந்தனர். கவர்னரும், பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பின், மேடைக்கு வந்தார்.
அவரை, முதல்வர் இ.பி.எஸ்., பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தென்னிந்திய பகுதிகளின் தலைமை பணியாளர் அதிகாரி ஜெனரல் பிரகாஷ் சந்திரா; தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் புனீத் சதா; வான்படை அதிகாரி ஏர் கமோடர் விபுல்சிங்.
கிழக்கு மண்டல கடலோரக் காவல் படை கமாண்டர் பரமேஷ்; தமிழக போலீஸ் டி.ஜி.பி., திரிபாதி; சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராஜேஷ்தாஸ்; சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோரை, கவர்னருக்கு முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்.
காலை, 8:00 மணிக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியேற்றினார். இந்திய விமானப்படை ஹெலிகாப்டர், கொடி கம்பத்தின் மேலே பறந்தபடி, மலர்களை துாவியது. நாட்டுப்பண் இசைக்கப்பட்டது.
அதன்பின், விங் கமாண்டர் குஷால் சுஜ்லா தலைமையில், அணிவகுப்பு துவங்கியது. ராணுவ படைப்பிரிவு, ராணுவ கூட்டுக்குழல் முரசு இசை, கடற்படை பிரிவு, வான்படை பிரிவு, கடலோர காவல் படை, கடற்படை ஊர்தி, வான்படை ஊர்தி, கடலோர காவல் படை ஊர்தி, முன்னாள் ராணுவத்தினர் படைப்பிரிவு, சி.ஆர்.பி.எப்., - சி.ஐ.எஸ்.எப்., - ஆர்.பி.எப்., படைப்பிரிவு வீரர்கள் அணிவகுத்து வந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து, தமிழக சிறப்பு காவல் பெண்கள் பிரிவு, சிறப்பு காவல் பிரிவு கூட்டுக்குழல் முரசு இசை, பேரிடர் நிவாரணப் படை, சிறப்பு காவல் படை ஆண்கள் பிரிவு, கமாண்டோ படைப்பிரிவு, சென்னை பெருநகர காவல் கூட்டுக் குழல் முரசு இசை, நீலகிரி படைப்பிரிவு,
குதிரைப்படை பிரிவு, தமிழ்நாடு வனத் துறை படைப்பிரிவு, சிறைப்படை கூட்டுக்குழல் முரசு இசை, சிறை படைப்பிரிவு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் படைப்பிரிவு, ஊர்காவல் படை ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் அணிவகுத்து வந்தனர்.
அணிவகுப்பு முடிந்ததும், வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம்; காந்தியடிகள் காவலர் பதக்கம்; சிறந்த விவசாயிக்கான சிறப்பு விருது ஆகியவற்றை, முதல்வர் இ.பி.எஸ்., வழங்கினார். அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து, தென்னக பண்பாட்டு மையம், செய்தி மக்கள் தொடர்பு துறையினர் ஏற்பாடு செய்த, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதைத் தொடர்ந்து, அரசு துறைகளின் செயல்பாடுகளை விளக்கும், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடந்தது.
அணிவகுப்பு முடிந்ததும், அணிவகுப்பு தளவாய் விங் கமாண்டர் குஷால் சுஷ்லாவை, தலைமைச் செயலர் சண்முகம், கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் நாட்டுப்பண் இசைக்க, விழா, இனிதே நிறைவடைந்தது.
விழாவில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் ஜெயராமன், அமைச்சர்கள், எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள்
மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.