வியாசர்பாடி : சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஆதரவற்றோர் மைய நிர்வாகிகளை, போலீசார் தேடுகின்றனர்.
சென்னை, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரில், கல்வி, சமூக, பொருளாதார புனர்வாழ்வு மையம் உள்ளது.இங்கு, 20க்கும் மேற்பட்ட சிறுமியர் தங்கியுள்ளனர்.இம்மைய நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுப்பதாக, சிறுமி ஒருவர், குழந்தைகள் உதவி மைய தொலைபேசி எண், 1098க்கு, நேற்று முன்தினம் தகவல் அளித்தார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி தலைமையிலான குழுவினர், நேற்று காலை, சிறுமியரிடம் விசாரணை நடத்தினர். இதில், ஆதரவற்றோர் மைய நிர்வாகிகள், சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது.
அங்கிருந்த, 18 சிறுமியரை மீட்டு, சேத்துப்பட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்தனர்.தற்காலிகமாக மையத்தை பூட்டி, தலைமறைவான மைய இயக்குனர் மற்றும் குடும்பத்தினரை தேடுகின்றனர்.