சேலம்:இரட்டை கொலை வழக்கு விசாரணை கைதி, அரசு மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, நாதரசம்பட்டியைச் சேர்ந்தவர், முத்துவேல், 29. இவர், சொத்து விவகாரத்தில், தாய், சித்தியை கொன்றதாக, நாதரசம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம், 2020 ஆக., 29ல் நடந்தது. பின், முத்துவேல், குண்டர் சட்டத்தில் கைதானார். தொடர்ந்து, சிறையில் இருந்த அவரை விடுவிக்க, குடும்பத்தினர், உறவினர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த விரக்தியில், கடந்த, 16ல், சிறை மதில் சுவரில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அதில், கால் முறிந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும், மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, சிகிச்சை அறையின், இரண்டாம் மாடி கழிப்பறைக்கு சென்றவர், அங்குள்ள ஜன்னல் வழியே குதித்து, தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்டு, மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.