கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே, கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்ற உறவுகள், ஒன்றுகூடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வலசகவுண்டனூரில் வசித்தவர்கள் கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன் கல்வி, வேலை வாய்ப்புக்காக சென்னை, பெங்களூரு என பல்வேறு ஊர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் சென்று விட்டனர். அவர்களை ஒன்றிணைக்கும் வகையில், இளைய தலைமுறையினர், 50 ஆண்டுகளுக்கு பிறகு, உறவினர்களை விட்டுச் சென்றவர்களை அறிமுகப்படுத்தவும், உறவை வலுப்படுத்தி மேம்படுத்தவும் முடிவு செய்து, கடந்த ஒரு மாதமாக, 'வாட்ஸ் ஆப்' மற்றும் 'பேஸ் புக்' உள்ளிட்ட வலைதளங்கள் மூலம், தங்கள் குடும்ப தலைமுறையினர் அனைவரையும் தேடி, தொடர்பு கொண்டனர். அதன்படி, 50 ஆண்டுகளுக்கு பிறகு, 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள், வேலம்பட்டி கோவிலூரிலுள்ள, குலதெய்வ கோவிலான பச்சயம்மன் கோவிலில், ஒன்று கூடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். அப்போது, 50 ஆண்டுகளுக்கு முன், விட்டுச்சென்ற பழைய நினைவுகளை பற்றி ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். அறிமுகப்படுத்தி கொண்ட பின், உறவுகளை வளர்க்கும் வகையில், பெண்களுக்கு வளையல் அணிவித்து, தாய் வீட்டு சீதனம் வழங்கி, மகிழ்ந்தனர். உறவினர்கள் தங்கள் இல்லங்களில் தயாரித்த, பாரம்பரிய உணவுகளை அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தனர்.