ஓசூர்: ஓசூரில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான நகையை கொள்ளையடித்த, ஏழு பேர் கும்பலை, நேற்று, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் கடந்த, 22ல், 10 கோடி ரூபாய் மதிப்பிலான, 25 கிலோ நகைகளை வடமாநில கும்பல் கொள்ளை அடித்தது. அக்கும்பலை சேர்ந்த ஏழு பேரை, தெலுங்கானா மாநிலம், சைபராபாத் போலீசார் கைது செய்தனர். அவர்களை அங்கிருந்து அழைத்து வந்த, கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்படை போலீசார், நேற்று காலை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், ஓசூர் ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, பறிமுதல் செய்த, 25 கிலோ நகைகள், 93 ஆயிரம் ரூபாய், 7 துப்பாக்கிகள், 97 தோட்டாக்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. கொள்ளையர்களிடம் விசாரணை நடத்த, 12 நாள் போலீஸ் கஸ்டடி கேட்டு, போலீசார் நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதை விசாரித்த நீதிபதி தாமோதரன், 10 நாள் கஸ்டடி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, கொள்ளையர்களை, தனி இடத்தில் வைத்து விசாரிக்க, போலீசார் அழைத்து சென்றனர். கர்நாடகா மாநிலம், பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியிலுள்ள பிரகதி நகர், கோனேரிபள்ளி அக்ரஹாரத்தில், இரு வீடுகளை வாடகைக்கு எடுத்து, கொள்ளை கும்பல் சதித்திட்டம் தீட்டியுள்ளது. அங்கு, அவர்களை நேரில் அழைத்துச்சென்று விசாரிக்கவும், கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது எப்படி என, முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் வைத்து, நடித்து காட்ட வைக்கவும், போலீசார் முடிவு செய்துள்ளனர்.
'யு டியூப்'பில் பார்த்து: மொபைல்போன் ஜாமர் கருவி, ஜி.பி.எஸ்., உள்ளதை காண்பிக்கும் கருவி, மெட்டல் டிடெக்டர் கருவி போன்றவற்றை கொள்ளை கும்பல் வாங்கி, அதை பயன்படுத்த, 'யு டியூப்' மூலம் அறிந்துள்ளனர். கொள்ளையின் போது மொபைல்போன் ஜாமரை பயன்படுத்தி, டவர் சிக்னலை துண்டித்துள்ளனர். ஆனால், ஜி.பி.எஸ்., கண்டுபிடிக்கும் கருவியின் பேட்டரி குறைந்ததால், நகையுடன் இருந்த ஜி.பி.எஸ்., கருவியை, கொள்ளை கும்பல் கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால் தான், கொள்ளை கும்பல் போலீசாரிடம் சிக்கியது.
பழைய குற்றவாளி: கைதான கொள்ளையன் ஷங்கர்சிங்பாகல், ஏற்கனவே ஒரு கொலையில் கைதாகி, 12 ஆண்டு சிறையிலிருந்து கடந்த, 2019ல் விடுதலையானார். அதன் பின், ரூப்சிங்பாகலுடன் சேர்ந்து, பெட்ரோல் பங்க் கொள்ளை, சென்ட்ரல் கிராம வங்கி கொள்ளை மற்றும் பஞ்சாப் மாநிலம், லூதியானா முத்தூட் பைனான்ஸ் நிறுவன கொள்ளை முயற்சி போன்றவற்றில், அவர் ஈடுபட்டுள்ளார்.