கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுக்கு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய சித்த மருந்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற பின், கலெக்டர் மலர்விழி பேசியதாவது: சுகாதாரத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் என அனைவரின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. பல்வேறு நிலைகளில் பணியாற்றக்கூடிய அரசு அலுவலர்கள் பல்வேறு காரணங்களால், தங்கள் உடல்நிலையை கவனித்து கொள்வதில் அக்கறை செலுத்துவதில்லை. சித்த மருத்துவம் பாரம்பரியமான மருத்துவ முறையாகும். எந்தவொரு ஒரு பக்கவிளைகளும் ஏற்படாமல் நோயை குணப்படுத்தும் ஆற்றல் மிக்கது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட அமுக்ரா சூரணம், நெல்லிக்காய் லேகியம், ஆடாதொடை மணப்பாகு, தாளிசாதி சூரணம் போன்ற மருந்து பொருட்களை வழங்க உள்ளோம். முதற்கட்டமாக, 1,000 அரசு அலுவலர்களுக்கு இந்த மருந்து பொருட்கள் வழங்கப்படவுள்ளன. ஒரு பெட்டகம், 100 ரூபாய் மதிப்பீட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் இந்த மருந்து பொருட்களை மருத்துவரின் அறிவுரைப்படி முறையாக உட்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், சித்தா டாக்டர்கள் பர்வேஷ், கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.