கரூர்: கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், பல மாதங்களாக கழிவுநீர் சாலையில் செல்கிறது. அதை, நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை திருகாம்புலியூரில், வணிக நிறுவனங்கள், வீடுகள், ஓட்டல்கள், டீக்கடைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இந்நிலையில், வணிக நிறுவனங்கள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் பல மாதங்களாக சென்ற வண்ணம் உள்ளது. இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த மக்கள் புகார் தெரிவித்தும், நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், இரவு நேரத்தில் கொசு தொல்லை அதிகரித்து, பொதுமக்கள் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும், அப்பகுதியில் போதிய மின் விளக்குகளும் இல்லாததால், இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, அப்பகுதியில் சில இடங்களில் மட்டும் உள்ள, சாக்கடை கால்வாயை தூர் வார வேண்டும். அடைப்புகளை நீக்க வேண்டும்.