கரூர்: கரூர் மனோகரா கார்னரில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் விபத்துகளை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் நகரின், இதயம் போன்ற பகுதியாக மனோகரா கார்னர் உள்ளது. பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் உள்ள, மனோகரா கார்னர் வழியாக தின்னப்பா தியேட்டர் சாலை, ஜவஹர் பஜார், திருச்சி சாலை மற்றும் கோவை சாலைக்கு வாகனங்கள் பிரிந்து செல்கின்றன. இதனால், அப்பகுதியில் தானியங்கி சிக்னலும் அமைக்கப்பட்டுள்ளது.
பஸ்கள் நிறுத்தம்: இங்கு, காலை மற்றும் மாலை நேரங்களில், வெளி மாவட்டங்கள், வெளியூர்களில் இருந்து வரும் கல்லூரி, பள்ளிகளுக்கு சொந்தமான பஸ்கள், மாணவ, மாணவியரை அழைத்து செல்ல நிறுத்தப்படுகிறது. அதை, போக்குவரத்து போலீசார் கண்டு கொள்வதில்லை. இதனால், நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வேடிக்கை பார்க்கும் போலீஸ்: மேலும், அங்கு, பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், சில காரணங்களை முன் வைத்து திடீரென முன் அனுமதி பெறாமல், பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். இதனால், நடந்து கூட எளிதாக செல்ல முடியாது. மேலும், அங்கு, பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. ஆனால், அரசியல் கட்சிகள் இதை கண்டுகொள்வதில்லை. கரூர் போலீசாரும், அதை வேடிக்கை பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
தடை தேவை: இதனால், அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. நெரிசல் ஏற்படும் போது, ஜவஹர் பஜார், கோவை மற்றும் திருச்சி சாலையில் நீண்ட வரிசையில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதை தவிர்க்க, பள்ளி மற்றும் கல்லூரிக்கு சொந்தமான வாகனங்கள், அரசியல் கட்சிகளின் கொண்டாட்டங்களுக்கு போலீசார் தடை விதிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.