சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு மெயின்ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் டாரஸ், லோடு லாரிகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.சேத்தியாத்தோப்பு ராஜீவ் சிலை பகுதியிலிருந்து வடக்குமெயின்ரோடு வரை எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும். சாலையில் கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், ஜெயங்கொண்டம், அரியலுார், புதுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் அதிகளவில் சென்று வருகின்றன.வெளியூர்களிலிருந்து வரும் லாரிகள், லோடு லாரிகள், லோடு ஏற்ற வரும் லாரிகள் சாலையோரங்களில் நிறுத்தி செல்கின்றன.இரவு நேரங்களில் வரும் லாரிகளும் மணிக்கணக்கில் நிறுத்தி செல்வதால் பஸ்கள் செல்லும்போது எதிரே கடக்கும் வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளாகின்றன.வடக்குமெயின்ரோடு முழுவதும் இருபுறங்களிலும் லாரிகளை நிறுத்தி விடுவதால் நடந்து செல்வோர், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரங்களில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.