ராயபுரம்; ராயபுரத்தில், மரக்கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் பணிகளை, தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து, சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.
ராயபுரம் மண்டலத்தில் உள்ள, 15 வார்டுகளில் வெட்டப்பட்ட மரங்கள், கிளைகள், மரக்கழிவுகள் உள்ளிட்டவை தனியாக பிரித்தெடுக்கப்பட்டு, எரிபொருள் தயாரிக்கப்படுகிறது.மாநகராட்சியுடன் தனியார் நிறுவனம் இணைந்து, இந்த பணியை செய்கிறது. இதற்காக, ராயபுரம் பகுதிகளில் வெட்டப்பட்ட மரங்கள், கிளைகள், மரக்கழிவுகள் உள்ளிட்டவற்றை மாநகராட்சி ஊழியர்கள், யானைக்கவுனி, அண்ணா பிள்ளை தெருவிலுள்ள, எரிபொருள் தயாரிக்கும் மையத்திற்கு கொண்டு வருகின்றனர்.
இங்கு மரங்களை வெட்டி, அரைக்கும் இயந்திரத்தில் கொட்டுகின்றனர். அவை மரத்துாளாக மாற்றப்பட்டு, மற்றொரு இயந்திரத்தில் கொட்டப்படுகிறது.இந்த மரத்துாள் அழுத்தப்பட்டு, நிலக்கரி போன்ற எரிபொருளாக உருவாக்கப்படுகிறது.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'இந்த மர எரிபொருளை, தொழிற்சாலைகளுக்கு, அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். ஒரு டன், 7,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது' என்றனர்.