திருமங்கலம்:மதுரை திருமங்கலம் அருகே, கண்மாயில் குளிக்கச் சென்று, நீரில் மூழ்கிய மகன், மகளுடன், அவர்களை காப்பாற்ற முயன்ற தந்தையும் பலியானார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, கீழக்கோட்டை லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி, 35; லாரி டிரைவர். இவரது மனைவி தனலட்சுமி, 28. இவர்களுக்கு சங்கீதா, 10, யோகவர்ஷினி, 7, மகாமுகேஷ், 4 ஆகிய குழந்தைகள் இருந்தனர்.
விடுமுறையால் வீட்டில் இருந்த அழகர்சாமி, நேற்று மதியம், 2:00 மணிக்கு, குழந்தைகளுடன், அருகில் உள்ள புதுக்குளம் கண்மாய்க்கு குளிக்க சென்றார்.குளித்த போது, நீரில் மூழ்கிய, மகாமுகேஷை காப்பாற்ற முயன்று, அழகர்சாமியும் மூழ்கி தத்தளித்துள்ளார். அவரின் கையை பிடித்து இழுக்க முயன்ற சங்கீதா, நீருக்குள் இழுத்து செல்லப்பட்டார்.யோகவர்ஷினி, அழுதபடி ஊருக்குள் சென்று கூறினார். கிராம மக்கள் சென்று, மூன்று பேரையும் மீட்டனர். அழகர்சாமி சம்பவ இடத்திலும், இரண்டு குழந்தைகள், மருத்துவமனை செல்லும் வழியிலும் இறந்தனர்.