திருப்பூர்:தி.மு.க., தலைவர் ஸ்டாலினை வரவேற்க கட்டப்பட்ட வாழை மரங்களின் கழிவுகள், நிகழ்ச்சி முடிந்து நான்கு நாட்களாகியும் அகற்றப்படாததால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுகின்றனர்.
திருப்பூர் - காங்கேயம் சாலை, பள்ளக்காட்டுப்புதுாரில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி, 21ம் தேதி நடந்தது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். ஸ்டாலினை வரவேற்கும் வகையில், ராக்கியாபாளையத்தில் இருந்து, பள்ளக்காட்டுபுதுார் செல்லும் சாலையின் இருபுறமும், 1 கி.மீ.,க்கு, 1,000 வாழை மரங்கள், கரும்புகள் கட்டப்பட்டிருந்தன.
நிகழ்ச்சி முடிந்தவுடன், பொதுமக்களும், கட்சியினரும், வாழை மரங்களில் இருந்து, வாழைக்குலை மற்றும் கரும்புகளை வெட்டி சென்றனர். ஆனால், இன்னும் வாழை மரம், கரும்பு கழிவுகள், சாலையை ஆக்கிரமித்து, குப்பையாக கிடக்கின்றன. இப்படி, 1 கி.மீ.,க்கு கழிவுகள் சிதறி கிடப்பதால், சாலை குறுகலாகி, வாகனங்களில் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து, காயத்துடன் செல்லும் நிலை உள்ளது. பொதுமக்கள் கூறுகையில், 'நிகழ்ச்சி முடிந்ததும், உடனடியாக, தி.மு.க.,வினர் அகற்றியிருக்க வேண்டும். இதனால், நாங்கள் தான் பாதிக்கப்படுகிறோம்' என்றனர்.