திருப்பூர் : திருப்பூரில், சாக்கடையில் கிடந்த ஐந்து மாத சிசுவின் பிரேதத்தை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் மறுத்த காரணத்தால், போலீசார் டூவீலரில் எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமுருகன்பூண்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பாண்டியன் நகரில் சாக்கடை கால்வாயில், ஐந்து மாத சிசு ஒன்று கிடப்பதை நேற்று மாலை மக்கள் பார்த்தனர். உடனே, அப்பகுதியில் உள்ள ரோந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.அந்த இடத்துக்கு சென்று போலீசார் விசாரித்தனர். சிசுவின் பிரேதத்தை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல, அங்கிருந்த தனியார் ஆம்புலன்சிடம் போலீசார் தெரிவித்தனர். ஆனால், எடுத்து செல்ல மறுத்தனர்.
பணியில் இருந்த ரோந்து போலீசார் ரமேஷ்குமார் மற்றும் ஏட்டு மனோகரன் ஆகியோர் சிசுவின் பிரேதத்தை கைப்பற்றி, டூவீலரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குறைமாதத்தில் பிறந்ததால் சாக்கடையில் வீசப்பட்டதா என்பது குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.