தேங்காய் பருப்பு ஏல வர்த்தகம்வெள்ளகோவில்: வேளாண் விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 711 மூட்டைகளில் 35 ஆயிரத்து 697 தேங்காய் பருப்பு வரத்து வந்தது. இதில், முதல் தர தேங்காய் பருப்பு ஒரு கிலோ 137.70 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் பருப்பு 80.55 ரூபாய்க்கும், சராசரியாக 135.20 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த வார ஏலத்தில், 119 விவசாயிகள்,18 வியாபாரிகள் பங்கேற்றனர். மொத்தம், 46 லட்சத்து, 10 ஆயிரத்து 905 ரூபாய்க்கு ஏல வர்த்தகம் நடந்ததாக, சங்க கண்காளிப்பாளர் தெரிவித்தார்.
நெடுஞ்சாலை திறந்து வைப்புபொங்கலுார்: அவிநாசிபாளையம் முதல் ஒட்டன்சத்திரம் வரை, 70.2 கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலை ரோடு சீரமைப்புக்கு, 213.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலை நடந்தன. பணி நிறைவடைந்ததை ஒட்டி தமிழக முதல்வர் பழனிசாமி, சென்னை - தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம், ரோட்டை போக்குவரத்துக்கு திறந்து வைத்தார். இதற்காக கொடுவாய் பஸ் ஸ்டாப் அருகே நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் விஜய கார்த்திகேயன், பொங்கலூர் பி.டி.ஓ., மகேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
விவசாயிகளுக்கு ஊக்கத்தொகைபல்லடம்: பல்லடம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெரினாபேகம் வெளியிட்ட அறிக்கையில், 'காய்கறி சாகுபடியை அதிகப்படுத்தும் முயற்சியாக ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சீசன் இல்லாத இடைப்பருவ காலத்தில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, ஒரு எக்டருக்கு, 2,500 வரை மானியம் வழங்கப்படுகிறது. எனவே, காய்கறி பயிரிடும் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முன்வர வேண்டும்,' என அவர் கூறியுள்ளார்.
தார் ரோடு; மக்கள் மகிழ்ச்சிபொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியம், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில், வட்டமலைபாளையம் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அமைந்திருந்துள்ள போதிலும், ஊருக்குள் செல்லும் ரோடு மிக மோசமாக இருந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தற்போது, மாநில நிதிக்குழு மானியம் மூலமாக வட்டமலைபாளையத்திற்கு தார் ரோடு அமைக்கும் பணி, 6.70 லட்சம் ரூபாய் நடக்கிறது. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வெள்ளகோவில்: கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, புனித அமல அன்னை மேல்நிலை பள்ளியில் நடந்தது. திருப்பூர் மாவட்ட சமூகநலத்துறை, மகிழம் அறக்கட்டளை, மக்கள் தொடர்பு கள அலுவலகம் இணைந்து கொரோனா தடுப்பூசியின் அவசியம், தேசிய ஊட்டச்சத்து இயக்கம், பெண் குழந்தையை காப்போம், பெண் கல்வி, வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மூலம் விளக்கப்பட்டது. பள்ளி முதல்வர் ஹெலன்ரூபி, புஷ்பா, மகிழம் அறக்கட்டளை தலைவர் நடராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.