குன்றத்துார்; குன்றத்துார், சுப்பிரமணிய சுவாமி கோவிலை சுற்றி, குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள் தேங்கி கிடப்பதால், அப்பகுதி அசுத்தம் அடைந்துள்ளது. இது, பக்தர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்துாரில், மலையின் மேற்பகுதியில், சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் அடிவாரத்தில், 16 கால் மண்டபமும், மலைக்கு செல்ல, 84 படிக்கட்டுகளும் உள்ளன.இரண்டாம் குலோத்துங்க மன்னர் காலத்தில், இக்கோவில் நிறுவப்பட்டதாக, வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 800 ஆண்டுகளுக்கு முன்பே, இத்தலம் சிறப்புடன் விளங்கியதாகவும் கூறப்படுகிறது.பல்வேறு மாவட்டங்களில் இருந்து, தினசரி, ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சமீப காலமாக, இக்கோவிலை சுற்றி, பராமரிப்பு மோசமாக உள்ளது. மேற்பகுதி நுழைவாயிலில், திரும்பிய இடமெல்லாம் குப்பை, பிளாஸ்டிக் மயமாக உள்ளது.பக்தர்கள் சாப்பிடும் இலை, உணவு பொருட்கள், பிளாஸ்டிக் கவர், குப்பை ஆகியவற்றை, குவியல் குவியலாக, கொட்டியுள்ளனர். இதை சாப்பிடுவதற்காக, கால்நடைகள் உலா வருகின்றன. மற்றொரு புறம், பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்ட கழிப்பறை, பூட்டியே வைக்கப்பட்டு உள்ளது. இதனால், குடும்பத்துடன் வருவோர், கழிப்பறை வசதி இன்றி சிரமப்படுகின்றனர். இவர்கள், கோவில் பின்புறத்தில், புதருக்குள் சென்று, இயற்கை உபாதையை கழிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.பிரார்த்தனை தலமான, சுப்பிரமணிய சுவாமி கோவிலில், உள்ளே சுத்தமாகவும், வெளியே பராமரிப்பின்றி, அசுத்தமாகவும் இருப்பது, பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.இப்பிரச்னையில், அதிகாரிகள் தலையிட்டு, குன்றத்துார் முருகன் கோவிலை, முறையாக பராமரிக்கவும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.