குன்றத்துார்- குன்றத்துாரில், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், அறுவை சிகிச்சை, குழந்தை நல மருத்துவர்கள் இல்லாததால், பிரசவம் பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.குன்றத்துாரில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. கோவூர், தண்டலம், குன்றத்துார், இரண்டு மற்றும் மூன்றாம் கட்டளை, மலையம்பாக்கம், கொல்லச்சேரி, சிறுகளத்துார் என, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இதை பயன்படுத்தி வருகின்றனர்.பிரச்னைதினசரி, 400 முதல், 500 நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். பிரதி மாதம், 50 பிரசவம் பார்க்கப்படுகிறது. கர்ப்பிணி பரிசோதனை, குழந்தை நல மருத்துவம், பல் மருத்துவம், தடுப்பூசி மற்றும் சித்தா பிரிவுகள் உள்ளன.சில ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே, சிறந்த மருத்துவமனையாக, இந்த மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டது.இத்தனை சிறப்பு மிக்க, இந்த மருத்துவமனையில், குழந்தை நல மருத்துவர் இல்லை. அதே போல், அறுவை சிகிச்சை மருத்துவரும் இல்லை. இதனால், சமீபகாலமாக அறுவை சிகிச்சை பிரிவு மூடப்பட்டு, சுக பிரசவம் மட்டுமே பார்க்கப்படுகிறது.குழந்தை நல மருத்துவரும் இல்லாததால், குழந்தை சம்மந்தமான பிரச்னை அல்லது அறுவை சிகிச்சை என்றால், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர்.கர்ப்பிணிகளுக்கு எதாவது பிரச்னை என்றால், எழும்பூருக்கு அனுப்புகின்றனர். ஆபத்துகுன்றத்துாரில் இருந்து எழும்பூருக்கு செல்ல, ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆவதால், வழியிலேயே, தாய், சேய் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது.அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதில், கவனம் செலுத்தும் அரசு, குன்றத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தின் பிரச்னையை கருத்தில் கொண்டு, தேவையான மருத்துவர்களை நியமித்து, முறையாக பிரசவம் நடக்க வழிவகை செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.