கோவை : தமிழகத்தில், 34 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்திருப்பது, பொதுப்பணித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் இருப்பு குறித்த விபரத்தை, மாதம்தோறும் பொதுப்பணித்துறையினர் கணக்கிடுகின்றனர். 2020 டிச., முதல் 2021 ஜன., வரை, காஞ்சிபுரத்தில் 0.15 மீட்டர், தஞ்சாவூரில் 0.07 மீ., கன்னியாகுமரியில் 0.27 மீ., நிலத்தடி நீர் சரிந்துள்ளது. 34 மாவட்டங்களில், நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.கடந்தாண்டு இறுதியில் பெய்த புயல் மழை காரணமாக, இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக, பொதுப்பணித்துறையினர் கருதுகின்றனர்.அதிகபட்சமாக பெரம்பலுாரில் 3.06 மீ., அரியலுாரில் 2.38 மீட்டர், கள்ளக்குறிச்சியில் 2.87 மீட்டர் உயர்ந்துள்ளது.
ஆனால், முந்தைய ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு ஜனவரி மாத நிலத்தடி நீர் மட்டம், ஒன்பது மாவட்டங்களில் சரிவை சந்தித்துள்ளது.கோவை மாவட்டத்தில் 0.41 மீ., ஈரோட்டில் 1.23 மீ., நாமக்கல்லில் 0.25 மீ., சேலத்தில் 0.12 மீ., நீலகிரியில் 0.65 மீ., நிலத்தடி நீர் சரிந்துள்ளது. முந்தைய ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில், திருப்பூர் மாவட்டத்தில் 0.51 மீ., நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது.