நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டில் விவசாய நிலத்திற்குச் செல்லும் வழியில் சாலை போடும் பணி மந்தமாக நடைபெறுவதால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நடுவீரப்பட்டு - பாலுார் செல்லும் வழியில் செவத்தஐயனார் கோவில் எதிரே 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.விவசாயிகள் தங்களது நிலத்திற்குச் செல்லும் வழியில் கடந்த 3 மாதங்களுக்கு முன் சாலை போடும் பணி ஜல்லிகள் கொட்டப்பட்டதோடு பணி துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால், விவசாயிகள் தங்களது நிலத்திற்குச் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை அறுவடை செய்ய அறுவடை மிஷினை எடுத்துச் செல்ல முடியாமலும், அறுவடை முடிந்த வயல்களில் மீண்டும் பயிரிட இடுபொருட்களை எடுத்துச் செல்ல முடியாமலும் அவதியடைகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் சாலை போடும் பணியை துரிதமாக முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.