கடலுார் - தேர்தலில் போட்டியிட கட்சியில் 'சீட்' கேட்டு, கடலுார் மாவட்டத்தில் இருந்து அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போட்டி போட்டு விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. அதனையொட்டி, அனைத்து கட்சிகள் மட்டுமின்றி, தேர்தல் ஆணையமும் ஆயத்தப் பணிகளைத் துவங்கி விட்டது.தேர்தலுக்கான தேதி, இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு, தங்கள் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை வினியோகிக்கும் பணியை துவங்கியுள்ளன.தி.மு.க., சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 17ம் தேதி துவங்கியது. ஜெயலலிதா பிறந்த நாளான 24ம் தேதி முதல் அ.தி.மு.க.,வும், 23ம் தேதி பா.ம.க., 25ம் தேதி முதல் காங்., மற்றும் தே.மு.தி.க.,வும் விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றன. 24 மற்றும் 25ம் தேதி முகூர்த்த நாட்கள் என்பதால் அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ம.க., கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சென்னை தலைமை அலுவலகங்களில் விருப்ப மனு தாக்கல் செய்ய குவிந்தனர்.தி.மு.க.,- அ.தி.மு.க., கட்சியில் இருந்து மட்டுமே தலா 100க்கும் குறையாமல் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதற்காக அந்த 2 நாட்களிலும் மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் கட்சியினர் சென்னைக்கு படையெடுத்தனர்.கடலுார் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட அமைச்சர் சம்பத், சிதம்பரத்திற்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பண்ருட்டி தொகுதிக்கு சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., காட்டுமன்னார்கோவிலுக்கு முருகுமாறன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட தொகுதிக்கு குறைந்தது 10 பேர் வீதம் கட்சித் தலைமையிடம் மனுதாக்கல் செய்துள்ளனர்.தி.மு.க.,வில் கிழக்கு மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் குறிஞ்சிப்பாடி கேட்டும், மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் திட்டக்குடி கேட்டும் மனு கொடுத்துள்ளார்.
சிதம்பரம் கேட்டு அமைச்சர் பன்னீர்செல்வம் மகன் கதிரவனும், புவனகிரி கேட்டு சரவணன் எம்.எல்.ஏ.,வும் விருப்ப மனு கொடுத்துள்னளர்.தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில் முக்கிய நிர்வாகிகள் போட்டியிடக்கோரி கட்சியினர் சார்பிலும் ஏராளமான மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.அதேபோன்று, காங்., - பா.ம.க., - தே.மு.தி.க., - மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சியினரும், சீட் கேட்டு கட்சித் தலைமையகத்தில் விருப்ப மனு அளித்துள்ளனர்.