மதுரை : மதுரையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால் 60 சதவீதம் பஸ்கள் ஓடவில்லை.14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடன் நிறைவேற்ற வேண்டும், ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., பணியாளர் சம்மேளனம் உட்பட 9 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. மதுரை மண்டலத்தில் 16 பணிமனைகளில் ஆறாயிரம் தொழிலாளர்களில் 80 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை. 950 பஸ்களில் 60 சதவீதம் இயக்கப்படவில்லை.
அ.தி.மு.க., தொழிற்சங்கம் மற்றும் அரசு சார்பு தொழிற்சங்கத்தினர் 40 சதவீதம் பஸ்களை இயக்கினர். சில பணிமனைகளில் அ.தி.மு.க., தொழிற்சங்கத்தினர் அதிகாலையில் பஸ்களை இயக்க முயன்ற போது, அதை கண்டித்து பணிமனை வாயில்களில் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த மினி பஸ்கள் நகர் பகுதிக்கு இயக்கப்பட்டன. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. டி.கல்லுப்பட்டியில் 40க்கு 12 பஸ்களே இயக்கப்பட்டன.
தொழிற்சங்கத்தினர் கூறுகையில், "தனியார் மற்றும் வெளியாட்களை கொண்டு பஸ்கள் இயக்க முயற்சி செய்கின்றனர். மக்கள் உயிருடன் விளையாடும் முயற்சியை கைவிட வேண்டும். இன்று போராட்டம் தொடரும். கூடுதல் தொழிலாளர்கள் பங்கேற்பர்" என்றனர்.