முடிச்சூர்; முடிச்சூரில் உள்ள சீக்கனா ஏரி, பராமரிப்பின்றி கிடப்பதால், அதில், ஆகாயத் தாமரை, கோரை புற்கள் வளர்ந்து பாழடைந்துள்ளது.
இந்த ஏரியை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முடிச்சூரில், புறவழி - முடிச்சூர் சாலைகள் சந்திப்பில், சீக்கனா ஏரி உள்ளது. பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை அமைக்கப்பட்ட போது, கிழக்கு- மேற்கு என, இரண்டாக பிரிந்தது.ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின் அலட்சியத்தால், இந்த ஏரி, சீரழிந்து காணப்படுகிறது. மேற்கு பகுதியில் உள்ள ஏரியில், முழுவதும் ஆகாயத் தாமரையும், கோரைப் புற்களும் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. மற்றொரு புறம், சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. கிழக்கு பகுதியில் உள்ள ஏரியிலும், இதே நிலைமை தான். மாறாக, கழிவு நீர் கொட்டும் பகுதியாகவும் இது மாறிவிட்டது. முடிச்சூர், பெருங்களத்துார், மண்ணிவாக்கம், வரதராஜபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, கழிவு நீரை எடுக்கும் லாரிகள், அவற்றை இந்த ஏரியில் கொட்டுகின்றன.அதுவும், பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் இருக்கும் போதே, எவ்வித அச்சமும், தயக்கமும் இன்றி, ஏரியில் கழிவு நீர் கலக்கப்படுகிறது. இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினால், ரவுடிகளால் மிரட்டப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதில் தலையிட்டு, ஏரியில் கழிவு நீர் கொட்டப்படுவது தடுக்கப்படுவதுடன், அதை துார் வாரி, சீரமைத்து, நடைபாதை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.