காஞ்சிபுரம், - சாத்தான்குட்டை தெருவில், குடிநீர் குழாய் உடைப்பு, முறையாக பழுது பார்க்காததால், குடிநீர் வீணாகும் நிலை ஏற்படுகிறது, என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் நகர் பகுதிக்கு, ராணிபேட்டை மாவட்டம், திருப்பாற்கடல் பகுதியில் இருந்து, குடிநீர் குழாய் மூலம், தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.அந்த தண்ணீர், சாலபோகம் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து, பிள்ளையார்பாளையம் பகுதி வழியாக, பெரிய காஞ்சிபுரம், பல பகுதிகளுக்கு குடிநீர் பிரித்து அனுப்பப்படுகிறது.இதில், பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவில், அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகி வருகிறது. அதற்கு, இதுவரை நிரந்தர தீர்வு ஏற்படுத்தவில்லை.குடிநீர் குழாய் உடைப்பை, சரி செய்ய கிருஷ்ணன் தெருவில், மூன்று இடங்களில் பள்ளம் தோண்டி, அப்படியே உள்ளன.இந்நிலையில், சாத்தான்குட்டை தெருவில், கடந்த மாதம், குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, நகராட்சி ஜே.சி.பி., மூலம் பள்ளம் தோண்டி, குழாய் உடைப்பை சீரமைத்தனர்.அதே இடத்தில், மீண்டும் பழுது ஏற்பட்டு, நேற்று முன்தினம் மாலை, தண்ணீர் வெளியேறியது. இதை தொடர்ந்து, அந்த இடத்தில், நேற்று குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தை, கண்டு பிடிக்கும் பணி நடந்தது.அப்போது, நகராட்சி உதவி பொறியாளரோ அல்லது குடிநீர் பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் நகராட்சி பிட்டரோ இன்றி கூலித்தொழிலாளிகள் மட்டும் பணியை செய்து வருகின்றனர்.இதனால், அதற்கான தீர்வு ஏற்படவில்லை. அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுவதால், பணம், தண்ணீர் வீணாகிறது என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.