மதுராந்தகம் - மதுராந்தகம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், நேற்று, காலை, 8:00 மணியை கடந்தும், கடும் பனி மூட்டம் இருந்ததால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், மிகவும் அவதிக்குள்ளாகினர்.மதுராந்தகம் நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில், ஒரு வாரமாக காலை நேரத்தில், தொடர்ந்து, மூடுபனி சூழ்வதால், பொதுமக்கள் குளிரில் அவதிப்படுகின்றனர்.இதனால், இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி வழக்கமான பணிகள் தாமதமாகின்றன. சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை மட்டுமின்றி, நேற்று, மதுராந்தகம் கிராம சாலைகள், அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்துார் ஆகிய சாலை பகுதிகளிலும், அதிகளவு மூடுபனியால் சூழப்பட்டிருந்தது. சாலையில் செல்லும், வாகன ஓட்டிகள் விபத்தை தடுப்பதற்காக தங்கள் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றனர். காலை, 8:00 மணியை கடந்தும், பனி மூட்டம், கொஞ்சமும், குறையாததால், அனைத்து தரப்பு மக்களும் சிரமத்திற்கு உள்ளாகினர்.