செங்கல்பட்டு - செங்கல்பட்டு மாவட்டத்தில், நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில், முறைகேடு நடப்பதாக, விவசாயிகள் குற்றம்சாட்டினர்.செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா தலைமையில், கலெக்டர் வளாகத்தில், நேற்று, நடந்தது.கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:முரளிமோகன், விவசாய சங்க செயலர்: விவசாய நிலங்களில், பயிர்களை, காட்டுபன்றிகள் நாசப்படுத்துகிறது. இதனால், விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். காட்டுபன்றிகளை சுடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேளாண் துறையில் வழங்கும், நெல் விதைகள் தரமாக இல்லை. தனியாரிடம் நெல் விதைகள் தரமாக உள்ளது. வேளாண் துறையில் நெல் விதைகள் தரமாக வழங்க வேண்டும்.மணி, மாவட்ட பாலாறு படுகை விவாசாய சங்க தலைவர்: மாவட்டத்தில், நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில், முறைகேடு நடக்கிறது. இதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். விவசாய பயிர்களை நாசம் செய்யும், காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும்.தனசேகரன், கொங்கனாஞ்சேரி: பாலுார் ஏரி நிரம்பியதற்கு, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏரிக்கு நீர் வரத்து கால்வாய்கள் துார்வர வேண்டும். நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.வெங்கடேசன், விவசாயி: விவசாய வேலைகள் செல்ல ஆட்கள் கிடைப்பதில்லை.இளம்பெண்கள் த-னியார் வேலைக்கு செல்கின்றனர். விவசாய பணிகளில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், பணி செய்பவர்களை, விவசாய பணிகளில் ஈடுபடுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய பயிர்களை நாசப்படுத்தும் காட்டுபன்றிகளை சுடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேளாண் துறை உதவி இயக்குனர்: விவசாய பணிகளில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி செய்பவர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.வனத்துறை அதிகாரி: தமிழகத்தில், காட்டு பன்றிகளை சுடுவதற்கு, 11 மாவட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அனுமதி தரவில்லை. அனுமதி கேட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளோம்.