சிதம்பரம் : மழை காரணமாக நெற்பயிர்கள் அழுகியதால் வைக்கோல் தட்டுப்பாடு ஏற்பட்டு, வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கிவரும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடலுார் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் சம்பா சாகுபடியில் கிடைக்கும் வைக்கோல் விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. அத்துடன், டெல்டா பாசன பகுதியில் சம்பா சாகுபடி வைகோல் நன்றாக இருக்கும் என்பதால், நாகை, விழுப்புரம், புதுச்சேரி, அரியலுார் பெரம்பலுார், சேலம், நாமக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து கடலுார் மாவட்டம் வந்து வைக்கோல் கட்டுகளை வாங்கிச் செல்வர்.
இந்நிலையில், எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 'நிவர்' மற்றும் 'புரெவி' புயல் காரணமாக மிதமிஞ்சிய மழை பெய்தது. குறிப்பாக டிசம்பர் மற்றும் அறுவடை துவங்கும் நேரமான ஜனவரியில் பருவம் தவறி பெய்த மழையால், மாவட்டத்தில் பயிரிடப்பட்ட நெல் வயல்களில் 80 சதவீதம் நீரில் மூழ்கியது. வயல்களில் தேங்கிய நீர் வெளியேறாததால் நெற்பயிர்கள் அழுகின.அறுவடை முடித்து வைக்கோலைக் கட்டு கட்டிக்கொள்ளலாம் என அப்படியே வயலில் போட்டு வைத்தனர். அதற்கும் இயற்கை வேட்டு வைத்தது. யாரும் எதிர்பாராத வகையில் கடந்த வாரம் திடீரென 2 நாட்கள் மழை பெய்தது. இதனால் எஞ்சியிருந்த வைகோலும் வீணானது.
மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை நம்புவதை விட, தன் பிள்ளைகளின் படிப்பு, பெண்களின் திருமணம் உள்ளிட்ட குடும்ப தேவைகளுக்கு கால்நடை வளர்ப்பையே நம்பியுள்ளனர். தற்போது கால்நடைகளுக்கு கூட குறைந்த விலையில் கிடைக்ககூடிய வைக்கோலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் தீவனம் வாங்கிக் கொடுத்து கால்நடைகளை வளர்க்கும் அளவிற்கு வசதியில்லாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு இது மேலும் இடியானது.
வெளி மாவட்டங்களுக்கு இங்கிருந்து வைக்கோல் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வெளி மாவட்டங்களில் இருந்து வைக்கோல் வாங்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு வைக்கோல் கட்டுகள் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 160 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது.மேலும், மழையால் வைக்கோலுடன் நெல் வயல்களை பலர் உழவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், இந்தாண்டு வைக்கோல்கள் அளவுக்கதிகமாக இன்னும் விலை ஏற்றம் பெறவும், கடும் தட்டுப்பாடு ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.