கோவை:கோவையின் பல்வேறு பகுதிகளிலும், அ.தி.மு.க.,வினர் ரூ.500, வேட்டி, சேலை, ஒரு தட்டு வழங்கி வருவதாக, தி.மு.க.,வினர் குற்றம் சாட்டியுள்ளனர். பரிசு பொருட்கள் வழங்கிய அ.தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க, தி.மு.க., - எம்.எல்.ஏ., கார்த்திக் வலியுறுத்தி உள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளபோது, ஆளுங்கட்சியினர் பரிசுப்பொருட்கள் வினியோகித்துள்ளனர். இது, விதிகளை மீறும் செயல். ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் குறித்து அறிந்தும், மாவட்ட நிர்வாகம், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை வன்மையாக கண்டிக்கிறேன். தேர்தல் நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும். விதிகளை மீறும் ஆளுங்கட்சியினர் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.