கோவை:தேர்தல் பிரசாரத்துக்கான சொகுசு வாகனங்கள் தயாரிப்பு, கோவையில் மும்முரமாக நடந்து வருகிறது.தமிழகத்தில், ஏப்., 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.பல இடங்களில், பல நாட்கள் பல மணி நேரம் பிரசாரம் மேற்கொள்வது அவசியம். இதற்காக பல்வேறு வசதிகளுடன் கூடிய சொகுசு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.கோவை, சிவானந்தாகாலனி ராதாகிருஷ்ணன் ரோட்டிலுள்ள ஒரு நிறுவனம், அனைத்து வசதிகளுடன் கூடிய, பிரசார சொகுசு வாகனங்களை தயார் செய்து வருகிறது.பல ஆண்டுகளாக பல்வேறு தலைவர்களுக்கு இவர்கள் சொகுசு வாகனங்களை தயார் செய்து கொடுத்துள்ளனர். முதல்வர் பழனிசாமி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கான சொகுசு வாகனங்களை தயார் செய்து அனுப்பி உள்ளனர்.துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கான சொகுசு வாகனங்கள் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.நிறுவன பங்குதாரர் ரியாஸ் கூறியதாவது:ஏழு பேர் பயணிக்கும் வகையில், 'போர்ஸ்' நிறுவன வாகனம், பல்வேறு நவீன வசதிகளுடன் முழு வீச்சில் தயாராகிறது. பொதுவாக முன்புற இருக்கைகள் சுழலும் வகையில் அமைக்கப்படும். அதன் பின் தலைவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப மேடைகள் அல்லது மேலும், கீழும் இயங்கும் வகையிலும், 'ஹைட்ராலிக் லிப்ட்' பொருத்தப்படும்.இதுதவிர, குளிர்சாதனப் பெட்டி, கட்டில், மெத்தை, சிகையலங்கார அலமாரி, 'ஏசி', எல்.இ.டி., 'டிவி', வெஸ்டன் டைப் கழிவறை, குளியலறை, நீர் சேமிப்பு தொட்டி ஆகியவை தேவைக்கு ஏற்ப பொருத்தப்படும்.எல்.இ.டி., விளக்குகள், வை-பை வசதி, நவீன சவுண்ட் சிஸ்டம்ஸ் ஆகியவையும் பொருத்தப்படுகின்றன. தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா ஆகிய மாநில அரசியல் தலைவர்களுக்கு சொகுசு வாகனங்கள் தயாரித்து வழங்கப்படுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.