மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டம், காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசிமக தேர்த்திருவிழா கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 25ம் தேதி இரவு, பெட்டதம்மன் மலையில் இருந்து, அம்மன் அரங்கநாயகி தாயாரை, நான்கு ரத வீதிகள் வழியாக கோவிலுக்கு அழைத்து வந்தனர். 26ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், தேருக்கு எழுந்தருளினார்.பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, தேரின் மீது உள்ள சுவாமியை வழிபட்டனர். மாலை, 4:10 மணிக்கு தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது, நுாற்றுக்கணக்கான தாசர்கள் சங்கு ஊதி, சேகண்டி அடித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், 'கோவிந்தா, கோவிந்தா' என கோஷமிட்டு, நான்கு ரத வீதிகள் வழியாக தேரை இழுத்து வந்தனர்.இன்று காலை முதல் மாலை வரை பந்த சேவையும், இரவு குதிரை வாகனத்தில் பரி வேட்டையும் நடக்க உள்ளன.அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில், கோவை, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் பகுதிகளில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.