ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நேற்று திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கடந்த, 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 24ம் தேதி நள்ளிரவு ஆழியாறு ஆற்றுப்படுகையில் மயான பூஜை, 25ம் தேதி சக்தி கும்பஸ்தாபனம் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று காலை, 8:30 மணிக்கு நடந்தது.விரதமிருந்த பக்தர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்பட பலரும் அம்மனை மனமுருகி வேண்டி, குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆண்கள் குண்டம் இறங்கி முடித்ததும், பெண்கள் குண்டத்தில் இருந்த 'பூ'வை கைகளில் அள்ளிக்கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர், 300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத்துறை வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன. இன்று காலை, 8:00 மணிக்கு கொடி இறக்குதல், மார்ச் 1ம் தேதி காலை, 11:30 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.