பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே மர்மநபர்கள் கல் வீசி, அரசு பஸ் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனைமலை பகுதிக்கு மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.இந்நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு, ஆனைமலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி இரண்டு சிறப்பு பஸ்கள், பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தன. சீனிவாசபுரம் பாலம் அருகே வந்தபோது, பாலத்தின் மேல் இருந்த மர்ம நபர்கள், அரசு பஸ் மீது கற்களை வீசியுள்ளனர்.
அதில், ஒரு பஸ்சின் முகப்பு பகுதியும், மற்றொரு பஸ்சின் பின்பகுதி கண்ணாடியும் உடைந்தது.கையில் காயமடைந்த, மாசிநாயக்கன்பாளையம் தற்காலிக டிரைவர் அருண், 27, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அரசு பஸ்களின் மீது கற்களை வீசிய சம்பவம் குறித்து, பொள்ளாச்சி மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.