தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் நடத்தை விதிகளை தீவிரமாக அமல்படுத்தி வரும் அரசு அதிகாரிகள், போலீசார் உதவியுடன், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., அலுவலகங்களுக்கு 'சீல்' வைத்துள்ளனர்.
கொடி கம்பம் அகற்றுவது, சுவரொட்டிகளை அகற்றி, அரசியல் விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தற்போது 'கிளீன்' சென்னையை காண முடிகிறது. தமிழகத்தில், ஏப்.,6ல், சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. சென்னையில், தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த, 112 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், மாநகராட்சி, வருவாய், சுகாதாரம் என, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
சென்னையில் மட்டும், தேர்தல் பணியில், 40 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 90 சதவீதம் நிறைவுதேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட, 24 மணி நேரத்திற்குள், அரசு கட்டடங்கள், சுவரொட்டிகள், அரசியல் கட்சி சார்ந்த ஓவியங்கள், கொடிகள் அனைத்தையும் அழிக்க வேண்டும். இதையொட்டி, சென்னை அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் பாலங்கள் என, பெரும்பாலான இடங்கள் சுத்தமாகி வருகின்றன.இங்கு ஒட்டப்பட்டு இருந்த அரசியல் கட்சி சார்ந்த விளம்பரங்கள், தலைவர்களின் படங்கள், கொடிகள் என, அனைத்தையும், அதிகாரிகள் மேற்பார்வையில், ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
அத்துடன், பொதுத் துறை கட்டடங்கள், பொது இடங்களில் உள்ள அரசியல் சார்ந்த சுவர் ஓவியங்கள் மற்றும் சுவரொட்டிகள், பேனர் மற்றும் கொடிகளை அகற்றும் பணிகள், 48 மணி நேரத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். இந்த பணிகள், முழுமையாக நடந்து வருகின்றன. தனியார் கட்டடங்கள் மற்றும் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், ஓவியங்கள், கொடி கம்பங்கள் என, அனைத்தையும், 72 மணி நேரத்திற்குள் அழித்து, அகற்ற வேண்டும். இந்த பணிகள், 90 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டன. தென்சென்னை தொகுதி எம்.பி., அலுவலகம், அடையாறு மண்டல அலுவலக வளாகத்தில் உள்ளது.
வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம், திருவான்மியூரில் உள்ள, 182வது வார்டு அலுவலக வளாகத்தில் உள்ளது.சோழிங்கநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம், சோழிங்கநல்லுார் மண்டல அலுவலகத்தை ஒட்டி உள்ளது. இந்த மூன்று அலுவலகத்தையும், மாநகராட்சி அதிகாரிகள், நேற்று பூட்டி, 'சீல்' வைத்தனர்.சென்னை செங்குன்றம், ஜி.என்.டி., சாலை, பேருந்து நிலையம், சோத்துப்பாக்கம் சாலை, புறவழிச்சாலை உள்ளிட்ட, நாரவாரிக் குப்பம் பேரூராட்சி பகுதியில், அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள், விளம்பர பேனர் மற்றும் சுவெராட்டிகள் இருந்தன. அப்பகுதியில் நேற்று, 45 கொடி கம்பம், 60 விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன.ஆர்.கே.நகர், பெரம்பூர், துறைமுகம், எழும்பூர், ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகங்களை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பூட்டி, 'சீல்' வைத்தனர்.
எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இருந்த விளம்பர பலகைகள் மறைக்கப்பட்டுள்ளன.சென்னையில் உள்ள, எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகம் அனைத்திற்கும் பூட்டு போடப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட கார் உள்ளிட்ட வாகனங்களும் அகற்றப்பட்டன. விதிமீறலில் ஈடுபடுவோர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம்செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், தனி, மதுராந்தகம் தனி ஆகிய, சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இங்கு, சுவர் விளம்பரம் அழித்தல், பேனர்கள் அகற்றுதல் மற்றும் பணப்பட்டுவாடா தடுக்கும் பணியில், தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்களில், தலா மூன்று என, 21 பேர், பணியில் ஈடுபட்டுள்ளனர்.சட்டசபை தொகுதியில், சாலையின் முக்கிய சந்திப்புக்களில், நிலை கண்காணிப்பு குழுக்களைச் சேர்ந்தவர்கள் கண்காணித்துவருகின்றனர். மேற்கண்ட குழுவைச் சேர்ந்தவர்கள், 24 மணி நேரமும், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம்காஞ்சிபுரம் மாவட்டத்தில், நான்கு சட்டசபை தொகுதிகளில், 12 பறக்கும் படை குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், ஆலந்துார், என, நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும், தலா, மூன்று பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதேபோல் நிலையான கண்காணிப்பு குழுவினரும் ஒவ்வொரு தொகுதிக்கும், தலா, மூன்று குழுவினர் இடம் பெற்றுள்ளனர். கலெக்டர் அலுவலகம் மூன்றாவது தளத்தில், தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடாவை தடுக்க, பொதுமக்கள் புகார் தெரிவிக்க, இந்தக் கட்டுப்பாட்டு அறையை பயன்படுத்திக் கொள்ள, தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சியினருக்கு தெளிவுபடுத்த, அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.திருவள்ளூர் மாவட்டம்சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில், 30 பறக்கும் படை, 30 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைத்து, சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்ததால், மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா உத்தரவின்படி, ஒரு தொகுதிக்கு, மூன்று பறக்கும்படை, மூன்று நிலை கண்காணிப்பு குழு வீதம், மொத்தம், 30 பறக்கும் படை, 30 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு குழுவிலும், தாசில்தார் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தஸ்தில், ஒரு அலுவலர், நான்கு போலீசார் மற்றும் வீடியோ பதிவாளர் என, ஆறு பேர் வீதம், மொத்தம், 360 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதுதவிர தேர்தலுக்காக, பணம் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், முக்கிய இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்தும் கண்காணித்து வருகின்றனர்.