கடலுார் : அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கூட்டணி நிலைப்பாடு முடிவாகாததால் கடலுார் மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்காமல் கட்சி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,- தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., - மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் அந்தந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.இதற்கிடையே தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்., 6ம் தேதி நடைபெறும் என கடந்த 26ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால், அ.தி.மு.க., தலைமையும், தி.மு.க., தலைமையும் தங்களின் கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.குறிப்பாக, அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., வுடனான தொகுதி பங்கீடு முடிந்து அக்கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பா.ஜ.,- தே.மு.தி.,க.,- த.மா.கா., மற்றும் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் அ.தி.மு.க., தலைமை தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதே போல், தி.மு.க., தலைமையும் கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தொண்டர்களின் படையெடுப்பால் கடலுார் மாவட்டத்தில் கட்சி அலுவலகங்கள் களை கட்டும். குறிப்பாக, கட்சி அலுவலகங்களில் பந்தல் அமைத்து தொண்டர்கள் அமர நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். ஆங்காங்கே தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும்.
ஆனால், அ.தி.மு.க.,விலும், தி.மு.க., விலும் கூட்டணி நிலைப்பாடு குறித்து முடிவாகாததால் தேர்தல் களம் சூடுபிடிக்காமல் மந்தமாக உள்ளது. தொண்டர்களும் உற்சாகமின்றி உள்ளனர். இதனால் கட்சி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், 'கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்ற விவரம் தெரியவில்லை. கூட்டணி நிலைப்பாடு முடிவான பிறகே ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகளில் போட்டி; போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்த விவரங்கள் தெரிய வரும். அதன் பிறகே கட்சி அலுவலகங்களில் ஆலோசனைக் கூட்டம், பிரசார வியூகங்கள் என தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கும். தொண்டர்களும் ஆர்வத்துடன் தேர்தல் பணியாற்று வார்கள்.கூட்டணி நிலைப்பாடு குறித்து தெளிவான முடிவு கிடைக்கும் வரை தேர்தல் பணியில் மந்தமான நிலையே காணப்படும். கூட்டணி நிலைப்பாட்டிற்காக கட்சித் தலைமையின் முடிவுக்காக காத்திருக்கிறோம்' என்றனர்.