அன்னுார்:அன்னுாரிலிருந்து, காரமடைக்கு, டவுன்பஸ் இயக்காததால், 10 கிராம மக்கள் தவிக்கின்றனர்.அன்னுாரிலிருந்து, குருக்கிளையம்பாளையம், நல்லிசெட்டிபாளையம், குரும்பபாளையம், சாலையூர், பெரியபுத்துார் வழியாக அரசு போக்குவரத்து கழகத்தின், டவுன்பஸ் 25ஏ காலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை தினமும் ஐந்து முறை இயக்கப்பட்டது. கொரோனா காரணமாக பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறைந்து பஸ் இயக்கம் துவங்கி, ஐந்து மாதங்கள் ஆகி விட்டன. ஆனாலும், இந்த வழித்தடத்தில் டவுன்பஸ் இயக்கப்படவில்லை. இதனால், குருக்கிளையம்பாளையம், நல்லிசெட்டிபாளையம், சாலையூர் உள்பட 10 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல வழித்தடங்களில் டவுன்பஸ்கள் இயங்குகின்றன. இந்த வழித்தடத்தில் மட்டும் இயக்கப்படவில்லை. விரைவில் இயக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.