வால்பாறை:சோலையாறு அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.வால்பாறையில், கடந்த ஆண்டு பெய்த பருவமழையினால், அணைகள் அனைத்தும் நிரம்பின. ஆகஸ்ட் மாதத்தில், மொத்தம், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை நிரம்பியது. இதனையடுத்து அணையிலிருந்து பரம்பிக்குளம் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், பரம்பிக்குளம் அணையும் நிரம்பியது.பி.ஏ.பி., திட்டத்தின் இரண்டு பிரதான அணைகள் நிரம்பியதால், பாசனத்துக்கு நீர் பற்றாக்குறை ஏற்படாது என, விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக வால்பாறையில் மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்து, வறண்ட வானிலை நிலவுகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து வருவதோடு, அணைகளின் நீர்மட்டமும் வேகமாக சரிந்து வருகிறது.சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 8.24 அடியாக சரிந்தது. அணைக்கு விநாடிக்கு, 46 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 150 கனஅடி தண்ணீர், பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்படுகிறது. அதேபோன்று, பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், 54.16 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு, 325 கனஅடி நீர் வரத்தும், 957 கனஅடி நீர் வெளியேற்றமும் உள்ளது.தற்போது, பரம்பிக்குளத்தில் இருக்கும் தண்ணீர் திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்பட்டு, பாசனத்துக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அணைகளில் நீர் இருப்பு சரிந்து வரும் நிலையில், பாசனத்துக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்குமா என்ற சந்தேகத்தில், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.