திருப்பூர்:ஒசைரி நுால் விலை, நேற்று, மீண்டும் கிலோவுக்கு, 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. நுால் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று, திருப்பூர் பின்னலாடை துறையினரின் கோரிக்கை வலுத்துள்ளது.ஊரடங்குக்கு பின், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு ஆர்டர்கள், அதிகரித்துள்ளன. அதேசமயம், பின்னலாடை தயாரிப்புக்கு பயன்படும் ஒசைரி நுால் விலை, கடுமையாக உயர்ந்துவருகிறது. கோவை, திருப்பூர் உட்பட பல்வேறு பகுதி நுாற்பாலைகளிடம் இருந்து, ஒசைரி நுால் கொள்முதல் செய்யப்படுகிறது.நுால் ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்துதல், பஞ்சு விலை உயர்வு, உள்நாட்டில் நுாலுக்கான தேவை உயர்வு போன்ற காரணங்களால், நுாற்பாலைகள் தொடர்ந்து விலையை உயர்த்தி வருகின்றன.உற்பத்தி செலவு அதிகரிப்பால், ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கு, ஆடை தயாரிப்பது, திருப்பூர் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது. நிலையற்ற நுால் விலையால், ஆடைகளுக்கு விலை நிர்ணயிக்க முடியாமை; வெளி மாநிலம், வெளிநாட்டு வர்த்தகரிடம் இருந்து, ஆர்டர் பெறமுடியாத நிலைக்கு, தள்ளப்பட்டுள்ளன.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் ஆடை உற்பத்தி துறையினர் கோரிக்கை விடுத்தும், நுாற்பாலைகள், மாதம்தோறும் ஒசைரி நுால் விலையை உயர்த்தி வருகின்றன.மீண்டும் உயர்வுஇந்த மாதத்துக்கான ஒசைரி நுால் விலை பட்டியலை நுாற்பாலைகள் நேற்று வெளியிட்டன. இதில், மீண்டும் கிலோவுக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த 2020, செப்டம்பரில், கிலோவுக்கு 10 ரூபாய், நவம்பரில் ஏழுரூபாய்; டிசம்பரில் 10 ரூபாய்; இந்தாண்டு ஜனவரியில் 15 ரூபாய்; பிப்ரவரியில் 10 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஏழு மாதங்களில், கிலோவுக்கு 62 ரூபாய், விலை உயர்த்தப்பட்டுள்ளது.மீளமுடியாத வர்த்தகம்திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், ''நுால் விலை உயர்வால், ஒட்டுமொத்த ஆடை உற்பத்தி துறையும் பின்னடைவை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏற்றுமதி ஆர்டர்கள் கைநழுவி, போட்டி நாடுகளுக்கு செல்கின்றன. இதனால், பின்னலாடை துறை சார்ந்த ஏழு லட்சம் தொழிலாளர் வேலை இழக்கும் அபாய நிலை உருவாகியுள்ளது. ஓராண்டுக்கு, நுால் ஏற்றுமதியை முழுமையாக தடை செய்யவேண்டும். இல்லையெனில், உற்பத்தியில், 25 சதவீத நுாலை மட்டும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கவேண்டும்,'' என்றார்.போராட முடிவுதிருப்பூர் ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறுகையில், ''வெளிநாட்டு வர்த்தகர்கள், ஆடை விலையை உயர்த்தி வழங்க மறுக்கின்றனர். இதனால், ஏற்றுமதி நிறுவனங்கள் ஆர்டர்களை இழந்து தவிக்கின்றன. நுாற்பாலை துறையினருக்கு தொடர் கோரிக்கை விடுத்தும், எவ்வித பயனும் இல்லை; நுால் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்கவேண்டும்; இந்திய பருத்தி கழகம், பஞ்சு விலையை குறைக்கவேண்டும். நுால் விலை ஒரே சீராக தொடரவேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆடை உற்பத்தி, ஜாப்ஒர்க் துறையினரை ஒருங்கிணைத்து, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்,'' என்றார்.நுால் விலை எவ்வளவு?l கோம்டு ரகம்: 20ம் நம்பர் நுால், வரிகள் உட்பட, கிலோ 243 ரூபாய்; 25ம் நம்பர், 252; 30ம் நம்பர், 264 ரூபாய்; 32ம் நம்பர், 277 ரூபாய்; 34ம் நம்பர், 278 ரூபாய்; 40ம் நம்பர், 289 ரூபாய்; 44ம் நம்பர், 317 ரூபாய்.l செமிகோம்டு ரகம்: 20ம் நம்பர், 232 ரூபாய்; 25ம் நம்பர், 241 ரூபாய்; 30ம் நம்பர், 253 ரூபாய்; 34ம் நம்பர், 267 ரூபாய்; 40ம் நம்பர், 278 ரூபாய்