கோவை:சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கோவை வந்துள்ள துணை ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.தமிழகத்தில் ஏப்., 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. தொடர்ந்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 94 பேர் கொண்ட ஒரு கம்பெனி மத்திய தொழில்பாதுகாப்பு படை(சி.எஸ்.ஐ.எப்.,) வீரர்கள் ரயிலில் கோவை வந்தடைந்தனர்.மாவட்ட தேர்தல் அதிகாரியின் உத்தரவுப்படி, பறக்கும் படை மற்றும் மாநகர போலீசாருடன் இணைந்து தேர்தல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். நேற்று மாலை கண்ணப்ப நகர் புறக்காவல் நிலையம் முதல் புதுப்பாலம் வரையும், ரத்தினபுரி ஆறு முக்கு முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு, ஆம்னி பஸ் ஸ்டாண்ட் வரையும் துணை ராணுவ வீரர்களின் கொடி அணிவகுப்பு நடந்தது.துணை ராணுவத்தினருடன் மாநகர ஆயுதப்படை போலீசார் மற்றும் போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும் போலீசாரும் அணிவகுத்து சென்றனர். துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தியும், ஆயுதப்படை போலீசார் லத்திகளை ஏந்தியும் வரிசையாக நடந்து சென்றனர். 3 கி.மீ., நடந்த அணிவகுப்பில், 350 பேர் பங்கேற்றனர்.சட்டசபை தேர்தல் அமைதியாக நடக்கவும், அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்கவும் வலியுறுத்தி தொடர்ந்து மற்ற பகுதிகளிலும், கொடி அணிவகுப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.