கோவை;தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசாரின் விபரங்களை தேர்தல் தனி பிரிவு போலீசார் சேகரித்து வருகின்றனர்.சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், போலீசில் தேர்தல் பிரிவு துவக்கப்பட்டது. இப்பிரிவு போலீசார் தேர்தல் நடத்தை விதிமுறை மீறுவோர் மீது நடவடிக்கை, பதட்டமான ஓட்டுச்சாவடிகள், அங்கு பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை, கடந்த தேர்தல்களின் பதிவான வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.தேர்தல் சமயத்தில் பிரச்னைக்குரிய பகுதிகளில், ஜாதி, மத ரீதியாக பிரச்னை ஏற்படும் இடங்கள், ரவுடிகள், பழைய குற்றவாளிகள் பட்டியல், புதிய நபர்கள் குடியேற்றம் என, தர வாரியாக போலீசார் கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.மாநகர் மற்றும் மாவட்டத்தில் மொத்தமுள்ள ஓட்டுச்சாவடிகளில் கடந்த காலங்களில் பணியாற்றிய போலீசாரின் எண்ணிக்கை, தற்போது எங்கு எத்தனை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்; பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதலாக எத்தனை போலீசார் பணியில் இருக்க வேண்டும்; மொத்தமாக பணியாற்றும் போலீசாரின் எண்ணிக்கை, தேர்தல் பணிக்கு தேவைப்படும் போலீசாரின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் போலீசார் எந்த பகுதியை சேர்ந்தவர், அவர்களின் பின்புலன் என்ன, தேர்தல் பணியில் ஈடுபடுத்தலாமா, கடந்த தேர்தல்களில் இவர்களின் செயல்பாடு உள்ளிட்ட விபரங்களையும் தேர்தல் பிரிவு போலீசார் சேகரித்து வருகின்றனர்.