விருத்தாசலம்; குடிநீர் வேண்டி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் நாச்சியார்பேட்டை பகுதியில் 2000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. குடிநீர் குழாய் ஆங்காங்கே சேதமடைந்துள்ளதால், பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால், அப்பகுதி மக்கள் அருகில் உள்ள வயல்வெளிகளுக்குச் சென்று குடிநீர் பிடிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 10:00 மணியளவில், விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி., மோகன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், காலை 10:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.