கடலுார்: தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் முடிவாகாத நிலையில், தேர்தல் பணியைத் துவங்க முடியாமல் கடலுார் மாவட்ட அரசியல் கட்சியினர் தவித்து வருகின்றனர்.
இந்திய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அதிரடியாக அறிவித்தது. அறிவிப்பு வெளியான பிப்ரவரி 26ம் தேதி மாலையே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க, பொதுமக்கள் அரசியல் கட்சியினர், நன்னடத்தை விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என, கடலுார் மாவட்ட தேர்தல் துறை கேட்டுக்கொண்டதுடன், தேர்தல் பணிகளில் முழுவீச்சில் இறங்கியது.மாவட்டத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை, விதிமுறை மீறலைத் தடுக்க பறக்கும் படைகள், கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ பதிவுக்குழு, செலவின கணக்கு குழு என, அமைக்கப்பட்டு மாவட்டம் முழுதும் தேர்தல் அதிகாரிகள் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.ஆனால், வேட்பு மனு தாக்கல் 12ம் தேதி துவங்க உள்ள நிலையில், குறைந்த நாட்களில் தேர்தல் பணியை செய்ய முடியுமா என்ற தவிப்புக்கு அரசியல் பிரமுகர்கள் ஆளாகியுள்ளனர்.
அரசியல் கட்சிகளுக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இதுவரை முடிவாகவில்லை. தொகுதி பங்கீடு முடிந்த பிறகே ஒவ்வொரு கட்சியும் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். ஆனால், தற்போதுதான், தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.அதன்பிறகு, நேர்காணல் முடித்து, வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகே, தேர்தல் பிரசாரத்தில் இறங்க வேண்டும்.தொகுதி வாரியாக கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், செயல்வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டும். இதற்கே நாட்கள் கடகடவென ஓடிவிடும்.தேர்தலுக்கு 35 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட முடியாமல் தவித்து வருகின்றனர்.
இரண்டரை லட்சம் ஓட்டுகள் கொண்ட சட்டசபை தொகுதியில் குறைந்தது நுாற்றுக்கும் அதிகமான கிராமங்களை குறுகிய நாட்களில் வேட்பாளர்கள் சுற்றி வர முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.தேர்தல் அறிவித்து அதிகாரிகள் குழு பம்பரமாக சுழன்று வரும் நிலையில், தேர்தல் பணிகளை துவங்க முடியாததால் கடலுார் மாவட்டத்தில் தேர்தல் இன்னும் களைகட்டவில்லை.