தேனி : தேனி அரண்மனைப்புதுார் விலக்கு பகுதியில் தேனி -- போடி அகல ரயில்பாதையில் ஜல்லிக்கற்கள் அமைத்து சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகி தினமும் வாகன விபத்து நடக்கிறது.
மதுரை --- போடி அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேனி நகர் அரண்மனைப்புதுார் விலக்கு பகுதியில் ஆளில்லா ரயில்வே கிராசிங் பகுதி உள்ளது. இது போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். இங்குள்ள ரயில்வே பாதையில் ஜல்லிக்கற்கள் சீரமைக்கப்படாமல் இருப்பதால், காலை, மாலை என போக்குவரத்து அதிகரிக்கும் நேரங்களில் விபத்துக்கள் அதிகரித்துள்ளன. நேற்று காலை இதனை கடக்க முயன்ற காய்கறி வேனும், டூவீலரும் கவிழ்ந்தன. குண்டும் குழியுமாக உள்ள ரயில்வே பாதையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.