தேவாரம் : தமிழகம்- கேரளாவை இணைக்கும் சாக்கலுாத்துமெட்டு ரோடு திட்டத்தை செயல்படுத்த கோரி அங்குள்ள வன எல்லைப் பகுதியை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
தேவாரம் -- சாக்கலுாத்துமெட்டு ரோடு வசதி பெறுவதன் மூலம் போடி, தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் உட்பட 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கேரளாவுக்கும், அம்மாநிலத்தினர் தமிழகத்திற்கும் எளிதில் சென்றுவர முடியும். மேட்டுப்பட்டியில் இருந்து 4 கி.மீ., துாரம் சாக்கலுாத்துமெட்டுக்கு ரோடு அமைக்க அடிக்கல் நாட்டி 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் திட்டம் கிடப்பில் உள்ளதால் தற்போது நீண்டதுாரம் சுற்றிச்செல்கின்றனர். ரோடு வசதி கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முற்றுகை: இந்நிலையில் சாக்கலுாத்துமெட்டு ரோடு திட்டத்தை செயல்படுத்த கோரி நேற்று ஐந்து மாவட்ட பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி அன்வர் பாலசிங்கம் தலைமையில் தேவாரம் காங்., நகர தலைவர் துரைப்பாண்டியன், வர்த்தகர்கள் சங்க தலைவர் வெள்ளைச்சாமி, பொருளாளர் வெங்கடேசன் உட்பட விவசாயிகள், சாக்கலுாத்துமெட்டு வன எல்லைப்பகுதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். உத்தமபாளையம் ரேஞ்சர் அன்பு தலைமையில் வனத்துறையினர் விவசாயிகளிடம் பேசினர். உயரதிகாரிகளிடம் கூறி ரோடுக்கான திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் கலைந்து சென்றனர்.