கடமலைக்குண்டு : வருஷநாடு பகுதி மூல வைகை ஆற்றில் நீர் வரத்து தொடர்வதால் கரையோர கிராமங்களில் விவசாய பணிகள் தொய்வில்லாமல் மேற்கொள்ளப்படுகிறது.
மேற்குத்தொடர்ச்சி மலை வருஷநாடு மலைப்பகுதியில் பெய்யும் மழையால் மூல வைகை ஆற்றில் வரும் நீர் வாலிப்பாறை, வருஷநாடு, சிங்கராஜபுரம், மயிலாடும்பாறை, கடமலைக் குண்டு உட்பட பல கிராமங்களை கடந்து குன்னுார் வழியாக வைகை அணையில் சேர்கிறது. மலைப்பகுதியில் அதிக மழை பெய்தால் மட்டுமே மூல வைகை ஆற்றில் நீர் வரத்து ஏற்படும். கடந்த ஜனவரியில் பெய்த மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் நீர் வரத்து சில வாரங்கள் வரை தொடரும்.
தற்போது வெயிலின் தாக்கம் துவங்கியும் மூல வைகை ஆற்றில் நீர் வரத்து தொடர்கிறது. பல கி.மீ.,துாரம் உள்ள மணல் பரப்பை கடந்து வரும் மூல வைகை ஆறு கரைப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் நீர் சுரப்பை ஏற்படுத்துகிறது. இதனால் இப்பகுதியில் தற்போது பாதிப்பில்லாத விவசாய பணிகள் தொடர்கிறது.விவசாயிகள் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை வழக்கமாக நவம்பர், டிசம்பரில் முடிந்து விடும். இந்தாண்டு ஜனவரி வரை நீடித்தது. இதனால் ஆற்றில் நீர் வரத்து இன்னும் தொடர்கிறது.
இந்த நீர் வைகை அணைக்கு செல்லும் முன்பே வற்றி விடும். ஆற்றில் வரும் நீரால் இந்த ஆண்டு கோடையிலும் விவசாயத்தை தொடர முடியும். குறிப்பாக கத்தரி, வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் வாழை விளைச்சல் அதிகரிக்கும் , என்றனர். ---------