மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி நடப்பதால் இந்தாண்டு கும்பாபிேஷகம் நடத்தப்படுமா என பக்தர்கள் இடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் செய்து கும்பாபிேஷகம் நடத்தப்படுவது வழக்கம். மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 2009ல் கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. இந்தாண்டு கும்பாபிேஷகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணி நடப்பதால் இந்தாண்டு கும்பாபிேஷகம் நடத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.இக்கோயிலில் 2018 பிப்.,2ல் இம்மண்டபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
முதற்கட்டமாக கல் துாண்கள் அமைக்க நாமக்கல் மாவட்ட கல் குவாரியில் இருந்து கற்களை வெட்டி எடுக்கும் பணி துவங்கியுள்ளது. அடுத்த வாரம் இவை கோயிலுக்கு எடுத்து வரப்பட உள்ளன. இம்மண்டப சீரமைப்பு பணி 2023ல் தான் முடியும். அதுவரை கோயிலுக்கு கும்பாபிேஷகம் நடத்துவது சாத்தியமில்லை. வீரவசந்தராயர் மண்டபத்தை மட்டும் தவிர்த்து நடத்தவும் முடியாது. பக்தர்களும் அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் கும்பாபிேஷகம் என்பது கோயில் முழுவதும் திருப்பணிகள் முழுமையாக முடிந்த பிறகே நடத்தப்பட வேண்டும் என்பது ஆகமவிதி.
நிர்வாக தரப்பில் கேட்ட போது, ''ஏற்கனவே 2021-22ல் கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப் பட்டிருந்தது. வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகள் தாமதமாகும் பட்சத்தில் தக்கார், பட்டர்கள், அதிகாரிகளுடன் ஆலோசித்து எப்போது கும்பாபிேஷகத்தை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்'' என்றனர்.