காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தில், கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதால், டெங்கு தடுப்பு நடவடிக்கையாக, நகராட்சி சார்பில், கொசு மருந்து புகை அடிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.வடகிழக்கு பருவ மழைக்குப் பின், பருவநிலை மாற்றத்தால், காஞ்சி புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்கொசுத் தொல்லைஅதிகரித்துள்ளது.குறிப்பாக, மஞ்சள் நீர் கால்வாய் ஒட்டியுள்ள திருக்காலிமேடு, ஆனந்தாபேட்டை, நத்தப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், மாலை, 6:00 மணியில் இருந்தே, கொசுத்தொல்லை அதிகரித்துஉள்ளது.இதனால், நகரில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நகராட்சி ஊழியர்கள், வீடு வீடாக சென்று, டெங்கு கொசுப் புழு உற்பத்திக்கு காரணமான, திறந்தவெளியில் தண்ணீர் தேங்கி உள்ளதா என்பது குறித்தும், தண்ணீர் தொட்டிகள், பாத்திரங்கள் மூடி வைக்கப்பட்டுள்ளதா எனவும், கள ஆய்வு செய்து வருகின்றனர்.கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் குவிந்திருந்த, பழைய பொருட்களை அகற்றி வருகின்றனர். மேலும், தெருக்கள் முழுதும் புகை மண்டலமாகும் வகையில், கொசு மருந்து புகை அடிக்கும் பணியில், நகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இருப்பினும், மஞ்சள் நீர் கால்வாய் ஒட்டியுள்ள பகுதிகளில், தினமும், கொசு மருந்து புகை அடிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.